Saturday, February 26, 2022

உலகின் முதல் விண்வெளி வீரர்


உலகின் முதல் விண்வெளி வீரர்

 -----------------------------------------------------


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

 

குன்னென்ற சொல்லாலே

குவலயங்கள் படைத்தளித்தானே ..வல்லவன்

எல்லாமுமாய்  காட்சி தரும் 

அவன் திருக் காட்சியை 

என்னென்பேன்

அவன் பெரும் மாட்சியை

எப்படி உரைப்பேன்.

அவன் புகழ் ஓதுவோம் ...

அல்ஹம்துலில்லாஹ்.

00

அவன் அளித்த ஒரு திருத்தூதர்

 விண்ணகம் விரைந்த 

 முதல் விண்வெளிவீரர்

 பொன்னிகர் மேனியர்

 பூமான் நபிகள் எங்கள் 

 கண்மணி ரசூலே கரீம்

 அன்னவர் மீதும்

 அவர்தம் அடியார் கிளைஞர் மீதும்

 எந்நாளும் உரைப்போம்

 சலாம் சலவாத்...

 ௦௦

ஒளியின் கோட்டை விண்வெளி அங்கு,

ஒளிதான் மொழியும் மொழியை..

ஒளியின் பின்னே இருள் அதுவும்,

பேரொளியின் ஓர் அருள்.

வினாடிக்கு மூன்று இலட்சம் கிலோமீட்டரில்

விரையும் ஒளிக்கோட்டுக்கு

வேகத்தில் நிகரில்லை கண்டீர்

ஒளிர்பாதைக்கு வடிவில்லை

எனக் கொண்டீர்...  


ஒளியின்  உருவினர் மலக்குகள்..

விண்வெளியின் உயிரிகளும்

ஒளியின் படைப்புக்களே..

விண்வெளி ஏகிய

கண்மணி ரசூலும்

ஒளியின் ஒரு வடிவினர்

 

பேரொளியின் தூதுவர்..

நூர்ந்து விடாத-

நூர்முகம்மது...  

இருளில் நூல் கோர்க்க அன்னை ஆயிஷா

ஊசியை நூலுடன்  சேர்க்க..

ஒளி துலங்கிய அன்னவர்


வதன ஒளியில்

 நூல் கோர்த்த நூர்முகம்-அது

ஒளிவார்த்த முகமது...

00

 பேரொளியிலொரு நாட்டம் நடந்தது

பெருமானரைத் தம்மிடம் அழைக்கப்

பேரொளி நாட்டம் கொண்டது..

பேரொளியும், திருவொளியும்

ஒன்றையொன்று சந்திக்கப்

பெருவிருப்பம் கொண்டதால்,

ஏழு வானங்களும் பிளந்தன.

௦௦

விண்ணவர் தலைவர் ஜிபுரீல்

விண்ணக ஆணை ஏற்றுக்

கண்மணியை அழைத்துவரக்

கையில் புராக்குடன்  

கடிதில் வந்தார்...

௦௦

கண்மணி ரசூலே,

கதிரொளி  வதனமே... 

முன்னவன் ஒளி முதலோன்

தங்களை அழைத்துவர

விண்ணக வாகனமிதைத்

தந்தென்னைப் பணித்தான்  

ஏந்தலரே..ஏறுக இதில்....என்றார்

௦௦

ஒளியை ஏற்றிச்செல்ல

ஒரு நிபந்தனை சொன்னது புராக்,

‘’எந்தலரே, எம்பெருமானே,

திவ்விய நாயனின் திருச் சந்நிதிக்கு

கொண்டு சேர்க்கிறேன் தங்களை

மறுமையில் எனக்காக நீங்கள்

மன்றாட வேண்டுமென்றது.’’

௦௦

புன்னகை  புரிந்த பூமான் நபி

சம்மதம் சொல்லிப் புராக்கில் ஏற-

விண்ணகம் விரைந்தது விண்வாகனம்.

தன் பார்வை எட்டும் அளவில்

முன்கால் வைத்துப் பாய்ந்தது..

௦௦

முதலாம் வானத்தின்

முத்துக் கதவுகள் திறக்க-

முதலாம் மனிதரின் முகதரிசனம்...

ஆதம் நபி எங்கள்

மனுக்குலத்தின் அடிநாதம்,

முன்வந்து, முகமன் கூறி 

முசாபாஹ் செய்த பின்னர்-

௦௦

இரண்டாம் வானத்தின்

இரத்தினக் கபாடங்கள் திறந்தன...

ஈசன் ஈங்கு உடலுடன் உயர்த்திய

ஈஸா நபிகள் வந்தெதிர்கொண்டு

இதயச் செம்மல் நபிகள்பிரானை

இகபரம் போற்றி வாழ்த்தினர்--

௦௦

மூன்றாம் வானத்தின்

முத்துக் கதவுகள் திறந்தன

முத்து முகம்மதர் ரசூல்தம்மை

முதல்வன் படைத்த

மோகவெழில்  முகவெழில் ததும்பும்

முழுமதி யூசுப் நபியழகர்

முன்வந்து முகமன் கூறினரே

௦௦

நான்காம் வானத்தின்

 நட்சத்திரக் கதவுகள் திறந்தன..

 நட்சத்திரக் கணக்கின்

 நற்பலன்கள் நன்கறிந்த

 நன்னிறவண்ணர்  

 நபி இத்ரீஸ் அன்னவர்கள்

 நபிகள் பிரானுக்கு

 நல்வரவுரைத்தனர்..  

 ௦௦

 ஐந்தாம் வானத்தின்

 ஐம்பெரும் கதவுகளும்,

 அடுத்தடுத்து விலக-

 ஐம்பொன் நிறத்தினர்

 ஐம்புலன் வென்றவர்

 ஐங்குனர்நபி ஹாரூன்அலை  

 அண்ணல் எங்கள் கோமானை

 ஐயரி கூறி மகிழ்ந்தனர்-

 ௦௦

 ஆறாம் வானத்தில்

 ஆரும் காணா வழியொன்று 

 அன்று திறந்தது..

 அஸாவாலடித்து நதி பிளந்த

 ஆற்றல்மிக்க மூஸா நபிகள்

 ஆருயிராம் எம்பெருமானை

 ஆரத்தழுவிக் கொண்டனரே..-

 ௦௦

 ஏழாம் வானத்தில்

 எவருக்கும் திறக்காத

 திரையன்று விலக- மகனுக்காக

 ஏழகம் அறுத்துப் பலியிட்ட

 எம் தந்தை இபுராஹீம்நபி வந்து-

 ஏந்தல் எம் பெருமானை

 எதிர் கொண்டழைத்தனர்..

 ௦௦

 ஏழுவானிலும்

 ஏழு தூதரைச் சந்தித்த கதையை

 ஏழுகடல் மை கொண்டெழுதிய போதும்

 எடுத்துரைக்க எவராலும் இயலாத போது,

 ௦௦

 திவ்வியப் பேரொளியின்

 முன்னிலை அமர்ந்து  

 தரிசனம் பெற்றுத்

 தன்னிலை அறிந்த

 தாஹா ரஸூலின்

 தகைமை அறிவார் யாருளர்...? அதன்

 தன்மை சொல்ல எவருளர்...?

 ௦௦

 அற்புத மிஹ்ராஜ் என்னும்

 ஆன்மிகப் பயணத்தின்

 அகமியம் கூற ஆரால் முடியும்...?

 விண்ணேற்றத்தின் இரகசியம் எதுவோ..?

 விண்ணேகும் மகா சக்தி இதுவோ..

 அல்ஹம்துலில்லாஹ்..

 என்று சொல்வதன்றி

 வேறொன்றறியேன் பராபரமே’...

  

 

 

  

நபி நேசம்

நபி நேசம்

----------------

 

பாலையில் நபிகள் செல்ல

மேலே

நிழலிடும் மேகமாய் தொடர்வேன்..

 

சோலையில் நபிகள் இருக்கப் 

புகழ் 

சோபனம் பாடிக் களிப்பேன் 

 

மாலையில் நபிகள் நடந்தால்,

அவர்களைத்

தாங்கிடும் பாதணி ஆவேன் 

 

ஏழையாய் நபிகள் இருக்க

இரங்கி

வடித்திடும் விழிநீர்  ஆவேன்..

 

போரினில் நபிகள் செல்ல

ஏந்தும்

வீரப்  போர்வாள் நானாவேன்

 

நுதலில் இலங்கிடும் நூரினில்

எழில்மிகு

நபித்துவம் கண்டுமகிழ்வேன்

 

பாரினில் அவர்களைப் பார்த்திடப்

பாவி 

எனக்குப் பாக்கியம் இல்லையே..

 

நேரினில் நபிகளைக் கண்டால்

நேசத்தால் 

அக்கணமே முத்தமிட்டு

உயிர் துறப்பேன்

00

போர்த்திக் கொண்டிருப்பவரே

 

போர்த்திக் கொண்டிருப்பவரே

 -----------------------------------------------


ஆலங்கள் அனைத்தையும்

அன்பினால்

போர்த்திக் கொண்டிருப்பவரே...

 

ஒவ்வொரு பொருளையும்

கருணைப் போர்வை கொண்டு

போர்த்திக் கொண்டிருப்பவரே...

 

ரௌளா ஷரீபுக்குள்

மறைந்த திருவுடலை

மண்ணால்

போர்த்திக் கொண்டிருப்பவரே...

 

அஹ்லுல் பைத்துக்களை

அணைத்துப்

பாசத்தால்

போர்த்திக் கொண்டிருப்பவரே...

 

கலிமா மொழிந்தோரை

கல்பாலே

போர்த்திக் கொண்டிருப்பவரே...

 

கண்மணியே

எந்தன்

கல்பு குளிர உரைத்தேன்

சோபனங்கள்...

௦௦

முத்திரையிடப்பட்ட மது

 

முத்திரையிடப்பட்ட மது

➖➖➖➖➖➖➖➖

 

ஏந்தி நிற்கின்றேன்

என் கல்புக் கிண்ணத்தை..

மோகத்தால்

மையல் கொண்டு

தாகத்தால்

தன்னிலை மாறி,

அருந்தும்

வேகத்தால் 

வெறி கொண்டு


தீராப் போதையில்

விழிகள் சிவக்க

மாறாக் காதலில்

மயங்கித் தள்ளாட..


நிரப்புங்கள்

என் கல்புக் கிண்ணத்தை

உயர் கஸ்தூரியினால்

முத்திரையிடப்பட்ட

அந்த

முக-மது..

 00

கடைசியில் நிற்கிறேன் கண்மணியே ரஸூலே...

 

கடைசியில் நிற்கிறேன் கண்மணியே ரஸூலே

_______________________________________________

 

 

தாங்கொணாப் பாவச்சுமையுடன்

தாகித்து நிற்கிறேன் தடாகம் அருகில்,

தங்கமே தங்கள் திருக்கரத்தால் ஒரு 

 துளி நீர் பருகிட..

 

கொடும்பாவி

கொடுவெய்யிலில்

கூனிக் குறுகி நிற்கிறேன்

கோமானே, தங்கள்

கொடிநிழல் தேடி வந்தேன்...


செருக்கழிந்து உருக்குலைந்து

சாந்தி நபியே தங்கள்

சந்நிதிக்கு வந்தேன்

ஷபாஅத் தை நாடி...

 

யா..உம்மத்தி...என

அழைக்கும் ஒரு

கருணை மொழி கேட்கத்தான

 

கடைசியில் நிற்கிறேன்

கண்மணியே ரஸூலே...

0

திருப்பாதம் தாங்கி

 திருப்பாதம் தாங்கி

--------------------


முஹம்மதியப் பேரொளியை

 முகத்தில் பூசி

முத்தே முழுமதியே எனப்பதறித்

திருப்பாதம் இரண்டிலும்

முத்தமிட்டு 

மூச்சை விட்டு விட துடிக்கிறேன்

கண்மணியே நாயகமே

 

 

கண்மணியே நாயகமே

கல்புக்குள் வாழுகிற

காதலரே..எனக்கதறிக்

கால்களில் விழுந்து

கண்ணீரால் கழுவிடப் 

பதறுகிறேன் 

ரஹ்மத்துல் ஆலமீனே... 

 

ரஹ்மத்துல் ஆலமீனே

ரகசியப் பொக்கிஷமே..தங்கள்

பாதம் தாங்கிப்

பாக்கியம் பெற்ற 

பாதரட்சையாய் ஆகிடப் 

பரிதவிக்கின்றேன்

புனிதரே எங்கள் பூமானே..


புனிதரே எங்கள் பூமானே

 புகழோனின் திருத்தூதரே

 பக்கம் வந்துங்கள்

 பாதம் தாங்கி என்

 தலையில் வைக்கத்

 தவிக்கின்றேன் என்

 தங்கமே இரஸூல் நபியே...

 00

 

Book cover